அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்.. கேமரூன் நாட்டை சேர்ந்தவர் உட்பட 4பேர் கைது!
Dinamaalai November 16, 2024 01:48 AM

சென்னை நீலாங்கரை, விருகம்பாக்கம் பகுதிகளில் போதைப் பொருள் வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 54.5 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக நீலாங்கரை காவல் நிலைய தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி, நேற்று (நவ.,14) காலை, அக்கரை கிழக்கு கடற்கரை சாலை, சன்ரைஸ் அவென்யூ பஸ் ஸ்டாப் அருகே, தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

அவ்வழியாகச் சென்றவர்களை சோதனையிட்டதில், அவர்கள் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருள் வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த ரகு, திருவண்ணாமலை ஆரணியைச் சேர்ந்த கண்ணன், கேமரூனைச் சேர்ந்த ஜோனதன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 51 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள், எடை இயந்திரம் மற்றும் ரூ.400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், விருகம்பாக்கம் காவல் நிலைய சிறப்புப் படை போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, விருகம்பாக்கம் பள்ளி முதல் தெருவில் உள்ள மார்க்கெட் அருகே நேற்று இரவு சிறப்புப் படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த அன்புகிரியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து 3.5 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலாங்கரை, விருகம்பாக்கம் பகுதிகளில் மொத்தம் 54.5 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், போதைப்பொருள் வைத்திருந்ததாக பல்வேறு நபர்கள் தினமும் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.