அந்தமானில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமானில் உள்ள புத்த நல்லா பகுதியில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து அந்த பேருந்து ரங்கத்-மாயபந்தர் வழித்தடத்தில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பெடாபூரை சேர்ந்த ஜோயல் டிக்கா மற்றும் காய்கறி விற்பனையாளர் ஒருவர் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.