பகீர்.. எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி.. போலீசார் தீவிர விசாரணை!
Dinamaalai November 16, 2024 01:48 AM

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு வங்கியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் மரக்கதவின் கண்ணாடியை மட்டும் கீழே வைத்துள்ளார். பின்னர் வங்கி மேலாளர் அறைக்கு சென்ற அவர், பணம் வைக்கப்பட்டிருந்த வலுவான அறையின் சாவியை காணாததால், கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு ஆயுதத்தை கொண்டு ஸ்ட்ராங் ரூமை திறக்க முயன்றார். அதுவும் முடியாததால், வங்கிக் கொள்ளை தோல்வியடைந்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வங்கியில் பணம் எதுவும் திருடப்படவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், 'இன்று வங்கி செயல்படாது, அருகில் உள்ள திருவல்லிக்கேணி கிளை வங்கியை தொடர்பு கொள்ளவும்' என, வங்கி நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த புதன்கிழமை இரவு, வங்கி அருகே இருக்கக்கூடிய ரேடியோ கிடங்கில் கொள்ளை முயற்சி நடந்தது. சந்தேகமடைந்த மர்மநபர் கட்டிடத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்து, பின்னால் இருந்த செட்டரின் பூட்டை உடைத்து, முதல் தளத்திற்குச் சென்று அங்கிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்பகுதி முழுவதும் பணம் உள்ளதா என தேடியுள்ளார்.

ரொக்கமாக இருந்த 210 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு பொருட்களை எடுக்காமல் தப்பியோடிவிட்டார். நேற்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் திருவல்லிக்கேணி போலீசார் இந்த இரு கொள்ளை முயற்சியிலும் ஒரே நபர் தொடர்புள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.