உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் இருக்கும் மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனை முழுக்க புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக வெளியில் நோயாளிகள் மீட்கப்பட்டனர். புதிதாக பிறந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தனர். அவர்களில் 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தம் இரண்டு குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. அதில் ஒன்றில்தான் தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளும், உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு முண்டியடித்து வெளியில் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்படுவது போன்ற ஒருநிலை ஏற்பட்டது.
தீவிபத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. மேலும் 16 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின என்று மருத்துவமனையின் அதிகாரி அவினாஷ் தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைத்திருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் 54 குழந்தைகள் இருந்தது. அதில் 44 குழந்தைகள் மீட்கப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்தார். 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தன. தீவிபத்து குறித்து 12 மணி நேரத்தில் தனக்கு அறிக்கை தருமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு துணை முதல்வர் பிரிஜேஷை சம்பவ இடத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி இருக்கிறார். கான்பூர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் குழு ஜான்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கவேண்டும் என்று தெரிவித்தனர். மீட்பு பணியை மேற்கொள்ள தாமதம் செய்ததாக குழந்தைகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.