உத்தரப் பிரதேசம் டெல்லி - லக்னோ நெடுஞ்சாலையில் கேட்பாரின்றி கிடந்த சிவப்பு நிற சூட்கேஸை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து பதறியுள்ளனர். பின்னர், அதை காவல்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் இளம்பெண்ணின் உடல் இருந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசம் ஹாப்பூர் மாவட்டத்தில் டெல்லி - லக்னோ நெடுஞ்சாலையில் கேட்பாரின்றி கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் கிடந்த சூட்கேஸை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், சூட்கேஸை திறந்து பார்த்தபோது, ஒரு பெண்ணின் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 25 முதல் 30 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.
முதற்கட்ட அறிக்கை கிடைத்ததும், தடயவியல் நிபுணர்களுடன் ஒரு போலீஸ் குழு விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. விசாரணை தொடங்கப்பட்டதை தொடர்ந்து, சூட்கேஸைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் எடுக்கப்பட்டு, அதிகாரிகள் அதை முழுமையாக ஆய்வு செய்தனர். அதில் சில ஆடைகளும் இருந்தன.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் வினீத் பட்நாகர் பேசுகையில், "உடலை கண்டுபிடிப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த பெண் இறந்திருக்கக்கூடும் என்பதையே அவரது காயங்கள் உணர்த்துகின்றன. போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
சமீபத்தில், கான்பூரில் நடந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்த மைனர் மாணவியை இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.