இது தெரியுமா ? தினமும் 3 வாழைப்பழங்களை சாப்பிடுவதால்...
Newstm Tamil December 01, 2024 12:48 PM

தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

தினமும் 3 வாழைப்பழங்களை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் கணிசமாக குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 422 மிகி பொட்டாசியம் உள்ளது மற்றும் இதில் சோடியம் எதுவும் இல்லை. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 3 வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி புரியும்.

 

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்து உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து. ஏனெனில் இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.மேலும் வாழைப்பழத்தை சாப்பிடுவது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது. அதுவும் வாழைப்பழத்தை காலை உணவின் போது உட்கொண்டால், உடல் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.

நார்ச்சத்து அதிகமான உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் அந்த நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. ஆய்வு ஒன்றில், நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்பது, இதய நோயின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடும் போது இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதய நோயின் அபாயமும் குறைகிறது.

 

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளன. அதுவும் ஒருநாளைக்கு உடலுக்கு வேண்டிய அளவில் சுமார் 20 சதவீதம் ஒரு வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கிறது. வைட்டமின் பி6 ஆனது இன்சுலின் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தி உதவுவதோடு, ஆரோக்கியமான செல்களை உருவாக்கவும் உதவுகிறது.மேலும் இது உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட தேவையான ஆன்டி-பாடிகளின் உற்பத்திக்கும் உதவுகிறது. ஆகவே உடலை நோய்த்தொற்றுகள் எதுவும் தாக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். இந்த வைட்டமின் சி-யானது சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி பழங்களில் மட்டும் தான் இருப்பதாக நினைத்தால், அது தவறு. ஏனெனில் இந்த வைட்டமின் சி வாழைப்பழத்திலும் உள்ளன. அதுவும் ஒரு வாழைப்பழத்தில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமினி சி-யில் 15 சதவீதம் உள்ளது. அதுவும் 3 வாழைப்பழத்தை உட்கொண்டால், உடலுக்கு போதுமான வைட்டமின் சி கிடைத்து, இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, தசைகள் மற்றும் எலும்புகளைத் தாங்கும் கொலாஜனின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகளவில் உள்ளன. இரும்புச்சத்தானது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டி, இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆகவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், தினமும் 3 வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

 

வாழைப்பழமானது ஒருவரது பசியை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. வாழைப்பழத்தின் இனிமையான சுவை மட்டுமின்றி, வாசனை பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் 27 மிகி மக்னீசியம் உள்ளன. இந்த கனிமச்சத்து மனநிலையை மேம்படுத்துவதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 420 மிகி மக்னீசியமும், பெண்களுக்கு 320 மிகி மக்னீசியமும் தேவை. உடலில் மக்னீசியம் குறைவாக இருக்கும் போது தான், ஒருவர் மிகுந்த பதட்டம், எரிச்சலுணர்வு, மன இறுக்கம் மற்றும் பிற மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே மனநலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.