ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் 4 நாள் சோதனை நடத்திய நிலையில், கணக்கில் வராத ரூ.137 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்களில் 45 கிலோ தங்கம் உள்ளடங்கும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருமான வரித்துறையினரின் சோதனையில் இன்றுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தங்கம் இது தான் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த போக்குவரத்து தொழிலதிபர் திகம் சிங் ராவுடன் தொடர்புடைய சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தங்கம் மட்டுமின்றி, ரூபாய் 4 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். தொழிலதிபருடன் தொடர்புடைய ராஜஸ்தான் மற்றும் மும்பையில் உள்ள இடங்கள் என ஒரே நேரத்தில் சுமார் 23 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திகம் சிங் ராவ் உதய்பூரில் நன்கு அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். பல நிறுவனங்களுடன் உதய்பூர் கோல்டன் டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனமும் அவருக்கு சொந்தமாக இருந்து வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் கணக்கில் வராத 137 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பது தெரிய வந்தது. இந்த சொத்துக்கள் திகாம் மற்றும் அவரது தம்பி கோவிந்த் சிங் ராவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் வெளிவராத சொத்துகள் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
உதய்பூர், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், வரி ஏய்ப்பு நடந்ததற்கான சந்தேகத்திற்குரிய ஆவணங்களும் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் திகாமின் வெளியிடப்படாத சொத்துக்களை வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்க முடிந்தது.
ராஜஸ்தானில் இதுவரை இவ்வளவு பெரிய தங்கம் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் துறை உறுதிப்படுத்தியுள்ளது. பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.
டிகாம் தனது கணக்கில் வராத செல்வத்தின் பெரும் பகுதியை சொகுசு கார்கள், ஹோட்டல்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது. உதய்பூரில் உள்ள திகாமின் வீட்டில் 3 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 25 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். சனிக்கிழமை அவரது பெயரில் இருந்த 7 வங்கி லாக்கர்கள் திறக்கப்பட்டதில் கூடுதலாக 25 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அறிவிக்கப்பட்ட வருமானத்தில் 1 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.