கடனுக்கான வட்டி குறித்த முக்கிய முடிவை எடுக்கப்போகும் ஆர்பிஐ.... டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் அறிவிப்பு...
ET Tamil December 03, 2024 08:48 PM
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூட்டம் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணி அளவில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த முடிவை ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையிலான 6 உறுப்பினர்களை கொண்ட கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம், பணவீக்க விகிதம், ஜிடிபி, உற்பத்தி உள்ளிட்ட பொருளதார சூழல்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். ஆனால் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் உள்ளது. ஆனால் இனி வரும் நாட்களில் இந்த நிலை தொடரும் என்பது தெரியவில்லை. இந்தியாவின் பணவீக்கவிகிதம் 4 சதவிகிதத்தில் இருக்க வேண்டுமென்ற இலக்கு உடன் ஆர்பிஐ தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணவீக்க விகிதம் உயர்ந்தே உள்ளது. மேலும் இந்தியாவின் பொருளதார வளர்ச்சியும் குறையும் என கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அதாவது இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 5.4 சதவிகிதமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணி அளவில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை வெளியிடும். இந்த முறையும் வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை எனில் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியும் பெரிய அளவில் உயராது. மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கான இ எம் ஐயும் குறைவாகவே இருக்கும். தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) வி.அனந்த நாகேஸ்வரன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், வணிகங்களுக்கான கடன் செலவுகளை எளிமைப்படுத்த வேண்டியதான் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதனுடைய தாக்கம் பணவீக்க விகிதத்திலும் எதிரொலிக்கிறது. இந்த நிலையில் பணவீக்கத்தை கணக்கிடும் பொருட்களின் பட்டியலில் உள்ள உணவுப் பொருட்களை நீக்கை விடலாம் என்ற ஆலோசனை எழுந்தது. ஆனால் இது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. டிசம்பர் 10ம் தேதியுடன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவரது பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி ஆர்பிஐ வெளியிடும் முடிவுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.