திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உள்ளிட்ட 2 பேர் குடும்பத்துக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த நவ.18-ஆம் தேதி, யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள பாகன் உதயகுமார் வீட்டிற்கு நேற்று சென்ற தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பாகன் உதயகுமார் மனைவி ரம்யா, சிசுபாலன் மகன் அர்ஜ§ன் ஆகியோரிடம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.