தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி - திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், ``பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" எனக் குறிப்பிட்டார்.
விகடன் கருத்துக்கணிப்புஇதற்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``ஆட்சியில் இருப்பதால் ஆணவத்தில் ஆடக்கூடாது. பதில் சொல்ல வேண்டிய இடத்தில்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் இருக்கிறார். அதனால், பா.ம.க நிறுவனர் ராமதாஸை அவமானப்படுத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக்கேட்டாக வேண்டும்" எனக் காட்டமாகப் பேசினார்.
இதற்கு பதிலளித்த எம்.பி திருச்சி சிவா, ``ஒருமுறை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `என் தகுதிக்கு நான் போய் இவரை சந்திப்பதா...' என முதல்வரை சந்திப்பது குறித்துப் பேசினார். ஒரு கட்சியின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், சிறையிலே அவதிப்பட்டவர், மக்களுக்காக நின்ற ஒருவர். அவரை இப்படி பேசியது சரியா... அவர் மட்டும் இப்படி பேசலாமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்இந்த விவகாரம் தொடர்ந்து விவாதமான நிலையில், நமது விகடன் பக்கத்தில், ``அவருக்கு (ராமதாஸ்) வேறு வேலை இல்லை - அதானியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில்..." எனக் கேள்வி எழுப்பி அதற்கு 'ஆணவப் பதில் (அ) முறையற்ற பதில்' - 'சரியான பதிலே...' - 'கருத்து இல்லை' என மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொடுத்து கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தோம்.
இதில் கலந்துக்கொண்ட நமது வாசகர்களில், அதானியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில், 'ஆணவப் பதில் (அ) முறையற்ற பதில்' என 59 சதவிகித வாசகர்களும், 'சரியான பதிலே...' என 35 சதவிகித வாசகர்களும், 'கருத்து இல்லை' என 6 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.