வெளியான அதிர்ச்சி தகவல்..! அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை சுனிதா வில்லியம்ஸை மீட்பதில் சிக்கல் தான்..!
Top Tamil News December 19, 2024 12:48 PM

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணி நிமித்தமாக 8 நாள் பயணமாக சென்றனர்.

எதிர்பாராத விதமாக அந்த விண்கலத்தின் இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் இல்லாமல் விண்கலத்தை மட்டும் திரும்ப வரவழைக்க நாசா முடிவு செய்தது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரையும் மீட்டு பூமிக்கு கொண்டு வர, எலன் மஸ்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் க்ரு-9 எனும் இரண்டு விண்வெளி வீரர்களுடன் கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு காலி இருக்கைகளுடன் டிராகன் விண்கலத்தில் அந்த விண்வெளி மையத்தை அடைந்தது. இந்த நால்வரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவதாக இருந்தனர். அவர்கள் அப்படி திரும்ப வேண்டுமென்றால், சர்வதேச விண்வெளி மையத்தில் அவர்கள் பார்க்கும் பணியை வேறொரு குழு தொடர வேண்டும்.

இந்நிலையில், அந்த குழுவின் (க்ரூ-10) விண்வெளிப் பயணம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் சாத்தியமில்லை என நாசா தெரிவித்துள்ளது.இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரின் 8 நாள் பயணம் 9 மாதத்திற்கும் மேலாக நீடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.