ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை கூட இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கு பிசிசிஐ-ன் எதிர்ப்பு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்னையே இதற்கு மிகப்பெரிய காரணம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதற்குப் பிறகு, ஹைப்ரிட் மாடலின் கீழ் இந்த போட்டியை நடத்த ஐசிசி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் விளையாடுவதற்குப் பதிலாக வேறு ஏதேனும் நாட்டில் விளையாடும். இதற்கு முதலில் சம்மதிக்காத பாகிஸ்தான், ஐசிசியின் கடுமையான அணுகுமுறைக்குப் பிறகு ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.