2012ல் கார்த்தியை வைத்து சகுனி படத்தை இயக்கியவர் சங்கர் தயாள். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த இவர் தற்போது யோகி பாபுவை வைத்து குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை முடித்துள்ளார். மேலும் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முயற்சி செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு உறவினர்கள் அனுமதி அளித்து அதற்கான பணிகள் துவங்கிய நிலையில், அதற்கான பணி துவங்கியவுடன் அவர் சுயநினைவை இழந்து இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.