உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னேற்றம்... பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை முன்னேற்றம்!
Dinamaalai December 20, 2024 01:48 AM

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை முன்னேற்றம்  அடைந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவத் துறையில், செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உறுப்புகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இரண்டு பேருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது நபரான அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த டோவான லூனி(வயது 53) என்ற பெண்ணுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

பன்றியின் சிறுநீரகங்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் அலபாமா பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். அதன்பின், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனிடையே பன்றிக் குட்டி ஒன்றின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட டோவான லூனியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மாற்று சிறுநீரகம் நன்றாக வேலை செய்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பரிசோதனைகளுக்காக அவர் தற்காலிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பன்றி சிறுநீரகங்கள் அல்லது இதயங்களைப் பெற்ற 4 பேரும் இரண்டு மாதங்களில் இறந்தனர். ஆனால் லூனியின் உடல்நிலை வேறுவிதமாக பாதிக்கப்படாததால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய நம்பிக்கை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.