ஒரே நாளில் இருவேறு விபத்துக்களில் 52 பேர் உயிரிழப்பு!
Top Tamil News December 20, 2024 11:48 AM

 ஆப்கானிஸ்தான்  கசினி மாகாணத்தில் தலைநகர் காபுலிலிருந்து கந்தார் நகரம் வரையில் செல்லும் நெடுஞ்சாலையில்  டிசம்பர் 18ம் தேதி புதன்கிழமை ஒரே நாளில் 2 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

கசினி மாகாணத்திலுள்ள ஷாபாஸ் கிராமத்தின் அருகே அந்த நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது ஒரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, கிழக்கு மாவட்டமான அண்டாரில் ஓடும் அதே நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து லாரியில் மோதி 2 வது விபத்து நிகழ்ந்துள்ளது.  

இந்த இரண்டு விபத்துகளிலும் மொத்தமாக 52 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், ஒவ்வொரு விபத்திலும் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், இவ்விரு விபத்துகளில் 65 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனைத் தொடர்ந்து மீட்புப்படையினர்  படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.  

அதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. தொடர் தாக்குதல்கள், உள்நாட்டுப் போர் இவைகளினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.  ஓட்டுநரின் அலட்சியப்போக்கினாலும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால்  அந்நாட்டில் வாகான விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றது.

ஏற்கனவே  மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணத்தில் இதேபோல் பேருந்து ஒன்று எரிபொருள் ஏற்றி வந்த லாரியின் மீது மோதியதில் 20 பேர் பலியாகினர். அதில்  38 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.