இந்திய தேசியக் கொடி போர்த்தி ஜாகிர் ஹுசைனின் உடல் நல்லடக்கம்!!
Dinamaalai December 20, 2024 07:48 PM

தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது  உடல் அமெரிக்காவில் தேசிய கொடி போர்த்தி முதல் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இந்திய அரசு சார்பாக சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதர் நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.  சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 2 வாரங்களாக  உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அவருக்கு பிரதமர்  மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், அவரின் உடல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலேயே  நேற்று டிசம்பர் 19ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாகிர் ஹுசைனின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பில் இந்திய தூதர் ஸ்ரீகர் ரெட்டி கலந்து கொண்டார்.

இந்திய இசைக் கலைஞர்கள் சிவமணி உட்பட  நேரில் கலந்து கொண்டு இசைக் கருவிகளை வாசித்து இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய தூதரகம்  “ புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞரும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான ஜாகிர் ஹுசைனின் உடல் சான் பிரான்சிஸ்கோவுக்கு அருகிலுள்ள மில் பள்ளத்தாக்கு பகுதியில் ஃபெர்ன்வுட் கல்லறையில் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது. இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக இந்திய தூதர் ஸ்ரீகர் ரெட்டி கலந்து கொண்டு தேசியக் கொடியை அவரது உடலுக்கு போர்த்தி மரியாதை செலுத்தியுள்ளார்.  அவரது மனைவி அன்டோனியா மின்னெகோலா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த இறுதிச் சடங்கில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சிவமணி உட்பட  இசைக் கலைஞர்கள், புலம்பெயர் இந்தியர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்" எனப் பதிவிட்டுள்ளார்.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.