சோகம்... படகு கவிழ்ந்து 38 பேர் பலி...100க்கும் மேற்பட்டோர் மாயம்... மீட்பு பணிகள் தீவிரம்!
Dinamaalai December 22, 2024 03:48 PM

காங்கோ நாட்டில், ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் இகியுடர் மாகாணத்தில் புரிசா என்ற ஆறு பாய்கிறது.

இந்நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புரிசா ஆற்றில் நேற்று படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்த படகில் புறப்பட்டு சென்றனர்.

ஆற்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர். இந்த கோர விபத்தில் ஆற்றில் மூழ்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.