உலகம் முழுவதும் ஆரம்ப காலம் முதலே ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமாக கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த தகவல்களை எல்லாம் கேட்டால் ஆச்சர்யபடுவீங்க. வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது முதல் கிறிஸ்துமஸ் தாத்தா வரையில் மின்னும் நட்சத்திரங்களிலும் கூட வழிபடுவதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது. உலகம் தனது வரலாறை கிறிஸ்த்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்த பின் என மாற்றிக்கொள்ளும் அளவிற்கு கடவுள் என்பதை தாண்டி சிறந்த ஆளுமையாக இயேசு கிறிஸ்து கருதப்பட்டு வருகிறார்.
அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த வானசாஸ்திரிகள் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும், அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.
மார்ச் மாதம் 25ம் நாள் மரியா அன்னை, இயேசுவைக் கருத்தரித்தார் எனும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25ல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டு தோறும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் சாண்டா கிளாஸ்:
கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் “சான்டா கிளாஸ்” எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக குழந்தைகள் நம்புகிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த “செயின்ட் நிக்கோலஸ்” என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவது சிறுவர்களை மகிழ்விக்கிறது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை:
1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவரால் தான் அனுப்பப்பட்டது. 1846-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். இன்று வாழ்த்து அட்டைகளில் வடிவு, நேர்த்தி, தொழில் நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டு கோடிக்கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக புழக்கத்தில் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் தெரிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டைகள் செய்து வருகின்றன.
கிறிஸ்துமஸ் குடில்:
1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது தான் கிறிஸ்துமஸ் குடில். இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இயேசு பிறந்த மாட்டுக் குடில், இயேசுவின் பெற்றோர்கள் இயேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக் குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசு பாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்க குடில் அமைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம்:
மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங்கினான். ஸ்காண்டி நேவியர்கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளின் படி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்துவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.