Allu Arjun : `நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி!' - அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பாஜக
Vikatan December 26, 2024 04:48 PM

இந்தியளவில் தற்போது பேசுபொருளாகியிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் மரணித்த விவகாரமும் அதைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் மீதான வழக்குகள் எனப் பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து எதிர்க்கொண்டுவருகிறார். அதே நேரம் தெலங்கானாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த ரெட்டி, 'இனி தெலங்கானாவில் சிறப்பு காட்சி ரத்து' என அறிவித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

புஷ்பா- 2

இந்த நிலையில் பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்குர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில, ``தெலுங்கு நடிகரின் நற்பெயருக்கு சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். திரையுலகில் தெலுங்கு நடிகர்களின் பங்களிப்பை நீங்கள் பார்த்தால், அவர்கள் திரைப்படத்தையும் இந்திய சினிமாவையும் உலகளவில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆனால் சிலர் அவர்களை தரைக்கு கீழே இழுக்க முயற்சிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாகப் பார்த்தால், பிரதமர் மோடியின் ஆட்சியில் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கினார். இவர்களின் பங்களிப்பை நாடும், உலகமும் பாராட்டியிருக்கிறது. மறுபுறம், 'ஆர்.ஆர்.ஆர்', 'புஷ்பா', 'கே.ஜி.எஃப்', 'பாகுபலி' என எல்லாமே இந்திய சினிமாவுக்குப் புகழைக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, சர்ச்சையை உருவாக்குவதற்குப் பதிலாக அதை சரி செய்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதில் அரசியல் செய்ய வேண்டாம்." என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.