Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் நினைவு கூர்ந்த மோடி
Vikatan December 27, 2024 06:48 AM
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்போதைய பிரதமரான நரேந்திர மோடியும் மன்மோகன் சிங்குடன் தான் உரையாடிய நாட்களை நினைவு கூர்ந்து இரங்கலை பதிவு செய்திருக்கிறார்.
Modi & Manmohan Singh

பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் X தள பதிவில், 'தங்களின் பெருமைமிகு தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை இழந்ததில் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து மரியாதைமிகு பொருளாதார அறிஞராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். அரசில் பல பதவிகளையும் வகித்திருக்கிறார். குறிப்பாக, நிதியமைச்சராக இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் சார்ந்த விஷயத்தில் பல அழிக்க முடியாத தடங்களை பதித்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும் அவரின் செயல்பாடுகள் ஆழமானதாக இருக்கும்.

ஒரு பிரதமராக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடும் முயற்சிகளை எடுத்தார். நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களுடன் நிறையவே உரையாடியிருக்கிறேன். அரசு நிர்வாகம் சார்ந்து ஆழ்ந்த ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறோம். எப்போதுமே அவரிடம் ஞானமும் பணிவும் மின்னுவதை பார்க்க முடியும். இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எண்ணிடலங்கா தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

டிசம்பர் 26 ஆம் தேதியான இன்று இரவு 8:06 மணிக்கு மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் 9:51 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.