புளோரிடாவின் ஆர்லாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிமியில் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தனது காதலன் மற்றும் அவர்களது ஐந்து வயது மகளுடன் ஒரு மோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். பின்னர் அவர்கள் மூவரும் சாப்பிட பீட்சாவை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
அவர்கள் ஆர்டர் செய்த பீட்சாவை 22 வயதான ப்ரியானா அல்வெலோ டெலிவரி செய்தார். அந்தப் பெண் பிரியனா அல்வெலோவிற்கு டெலிவரிக்கு $2 டிப்ஸைக் கொடுத்தார். ஆனால் $2 டிப்ஸ் போதுமானதாக இல்லை என்றும், ப்ரியானா அந்தப் பெண்ணிடம் மேலும் டிப்ஸ் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அந்தப் பெண் அவளுக்கு மேலும் டிப்ஸ் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரியானா அல்வெலோ மற்றும் அவரது முகமூடி அணிந்த தனது ஆண் நண்பர்களுடன், பெண் தங்கியிருந்த விடுதிக்கு சென்று, பெண்ணின் காதலனை தனி அறையில் அடைத்து வைத்து, அப்பெண்ணை கத்தியால் 14 முறை சரமாரியாக குத்தியுள்ளனர். அப்போது அறையில் இருந்த விலைமதிப்பற்ற பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவரது காதலன் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். எனினும், குறித்த பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, பிரியானா அல்வெலோவை கைது செய்து, தலைமறைவான அவரது ஆண் நண்பர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.