ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை...' - ரஹ்மான் சொல்லும் வாழ்வை மாற்றிய தருணம்
Vikatan December 28, 2024 02:48 PM

தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவைத் தாண்டி ஹாலிவுட் வரையில் உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக இன்றும் திகழ்பவர் `இசைப் புயல்' ஏ.ஆர். ரஹ்மான். இந்த நிலையில், சிறுவயதில் ஒரு இசைக்குழுவில் இருந்தபோது, மதுபோதையிலிருந்து கிட்டாரிஸ்ட் ஒருவர் கூறிய வார்த்தை தன்னுள் எப்படி ஆழமாகப் பதிந்தது எனவும், அது எப்படி தன்னை அறிந்துகொள்ள உதவியது என்பதையும் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான்

ஓ2 இந்தியா (O2 India) யூடியூப் சேனல் நேர்காணலில் இதுபற்றி பேசிய , ``சிறுவயதில் சில இசையமைப்பாளர்களுக்கு வாசித்துக்கொண்டிருந்த வேளையில், ஒரு இசைக்குழுவில் இருந்தேன். அப்போது, ஒரு முறை அந்தக் குழுவிலிருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர் மதுபோதையில் என் பக்கம் திரும்பி, `என்ன இசைக்கிறீர்கள்... நீங்கள் இசைப்பது சினிமா இசை' என்றார். அது 1985-86 என்று நினைக்கிறேன்... அந்த நேரத்தில், அவர் என்ன சொன்னார் என்பதை நான் உணரவில்லை.

சில வாரங்களுக்குப் பின்னர் அது என்னுள் தாக்கியது. பிறகுதான், அவர் சொன்னது சரிதான் என்று உணர்ந்தேன். என்னைப் பற்றி அது ஆழமாக யோசிக்க வைத்தது. அப்போதுதான், நான் வாசிக்கும் இசையமைப்பாளர்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதையடுத்து, மெல்ல அதிலிருந்து விலக ஆரம்பித்தேன். இசையில் என்னுடைய பாணி எதுவென்று அடையாளம் காணும் பயணம் தொடங்கியது.

ஏ.ஆர். ரஹ்மான்

ஆனால், அந்த தாக்கத்திலிருந்து முழுமையாக வெளியேற ஏழு ஆண்டுகள் ஆனது. அந்த கிட்டாரிஸ்ட் எதுவும் தவறாகக் கூறவில்லை. சில நேரங்களில் சில கருத்துகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவை, குறிப்பிட்ட விஷயங்களிலிருந்து வெளியேறச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது, என்னுடைய சொந்தத் தாக்கத்திலிருந்து விலகவும் எனக்கு உதவியது. அதாவது, என் இசையின் ஆன்மாவை நான் புதுப்பிக்கிறேன்." என்று கூறினார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.