மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாத்திமா ஷேக்(32). காலை 11 மணிக்கு பாத்திமாவும், அவரது 11 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அந்நேரம் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே பாத்திமா சென்று கதவை திறந்தார். வெளியில் முகமூடி அணிந்தபடி நின்ற நபர் அதிரடியாக பாத்திமாவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். அதோடு வீட்டுக்கதவை உள்பக்கமாக அந்த நபர் பூட்டினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அமைதியாக இருக்கவில்லையெனில் கடும் விளைவு ஏற்படும் என்று மிரட்டினான். திருடனின் அச்சுறுத்தலை மீறி தாயும், மகனும் கதவை திறக்க ஓடினர். அவர்களை திருடன் தடுத்தான். இதில் மூன்று பேருக்கும் இடையே நடந்த சண்டையில் திருடன் பாத்திமாவின் கையில் கத்தியால் குத்தினான்.
மகனுடன் பாத்திமாஅப்படி இருந்தும் போராடி பாத்திமா கதவை திறந்து வெளியில் வந்து உதவி கேட்டு கத்தினார். இதனால் திருடன் பயத்தில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றான். அந்நேரம் பாத்திமாவின் மகன் திருடனின் முகத்தில் இருந்த முகமூடியை கழற்ற முயன்றான். இப்போராட்டத்தில் திருடன் சிறுவனின் தோல்பட்டையில் கத்தியால் உரசினான். அப்படி இருந்தும் 11 வயது சிறுவன் திருடனின் முகத்தில் இருந்த முகமூடியை அகற்றிவிட்டான். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூடுவதற்குள் திருடன் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து பாத்திமா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் தாக்கியதில் காயம் அடைந்த தாயும், மகனும் மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. அதோடு பாத்திமா தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு வந்து திருடன் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளான் என்று இன்ஸ்பெக்டர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.