கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது. அதனை அடுத்து இந்த மிரட்டல் விடுத்தது எட்டாம் வகுப்பு மாணவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதனையடுத்து உடனடியாக இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டுகளும் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் வழக்கம் போல் மிரட்டல் என்பது தெரியவந்ததை அடுத்து விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வந்த வெளி நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து செல்போன் மூலம் யார் மிரட்டல் விடுத்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் எட்டாம் வகுப்பு மாணவன் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மாணவன் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva