பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
Dinamaalai December 29, 2024 09:48 PM

“பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது” என்று இன்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தப் பின்னர் பாமக தலைவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் கூறினார். 

முன்னதாக நேற்று புதுவையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் ஆவேசமாக பாமக தலைவர் மைக்கை வீசியெறிந்து விட்டு சென்ற நிலையில் இன்று டிசம்பர் 29ம் தேதி தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம்தான். எங்களுக்கு எல்லாம் ஐயா தான், எல்லா கட்சியிலும் நடந்தது போல நேற்றைய தினம் நடந்தது. இந்தாண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு பாமகவின் வளர்ச்சிப் பணிகள் நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோம். கட்சியின் வளர்ச்சி, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸுடன் பேசினேன்.

பாமக ஒரு ஜனநாயக கட்சி, காரசாரமான விவாதம் நடப்பது இயல்பு. எங்களுடைய கட்சி ஜனநாயக கட்சி, எங்களுடைய உட்கட்சிப் பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் பேசவேண்டியதில்லை. பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது. எங்களுக்கு எப்பவுமே அவர் ஐயா தான்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.