Manmohan Singh: `சுய நினைவை இழந்த மன்மோகன் சிங்; இறப்புக்கு காரணம் என்ன?' - மருத்துவமனை அறிக்கை!
Vikatan December 27, 2024 06:48 AM
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். டெல்லி எய்ம்ஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மருத்துவமனை தரப்பில் இதுசம்பந்தமாக அதிகாரப்பூர்வமாக அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
Manmohan Singh

மன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார். அதேமாதிரி, 90 -களில் நிதியமைச்சராக உலகமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவின் முக்கிய பட்ஜெட்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தவர் மன்மோகன் சிங். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1954 -ல் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் வணிகவியல் சார்ந்து மேலும் படித்தார். பஞ்சாப் யூனிவர்சிட்டியிலும் டெல்லி ஸ்கூப் ஆப் காமர்ஸிலும் ஆசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங், வணிகவியலில் கொண்டிருந்த மேதமை காரணமாக அரசின் வணிகவியல் துறைக்கு ஆலோசகராக 1970 -களில் நியமிக்கப்பட்டார்.

1991முதல் ராஜ்ய சபா உறுப்பினராக மன்மோகன் சிங் பணியாற்றி வந்தார். நிதியமைச்சராக இருந்தவர் 1998 - 2004 காலக்கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். அதன்பிறகுதான், 2004-2009, 2009-2014 என இரண்டு முறை பிரதமராகவும் இருந்தார். தற்போதும் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.

92 வயதாகும் மன்மோகன் சிங் சில மணி நேரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் முகாமிட தொடங்கிய நிலையில், மன்மோகன் சிங்கின் இறப்பை காங்கிரஸ் வட்டாரத்தினரும் உறுதி செய்திருக்கின்றனர்.

Manmohan Singh

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,'ஆழ்ந்த சோகத்துடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை தெரியப்படுத்திக் கொள்கிறோம். வயோதிகத்தால் ஏற்படும் அசௌகரியங்களுக்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், இன்று அவரது இல்லத்தில் இருந்த போது திடீரென சுயநினைவை இழந்தார். அப்போதே அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு சரியாக 8:06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 9:51 மணிக்கு அவர் உயிரிழந்தார்.' எனக் கூறப்பட்டிருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.