Doctor Vikatan: ரத்த தானம் செய்யும்போதோ, யாருக்கேனும் ரத்தம் ஏற்றும்போதோ, எந்த blood group யாருக்குப் பொருந்தும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது... ஒருவேளை பொருந்தாத ரத்தப் பிரிவை மற்றவருக்கு ஏற்றிவிட்டால் அது பிரச்னையாக மாறுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா
ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.ரத்த வகைகளை A, B, O மற்றும் Rh போன்றவற்றை வைத்து வகைப்படுத்துகிறோம். இந்த ஒவ்வொன்றிலும் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் பிரிவாக இருக்கலாம். இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையில் காணப்படும் மற்றொரு ரத்தப் பிரிவு பாம்பே பிளட் க்ரூப்.
ரத்த செல்லானது A ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது A க்ரூப். B ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது B க்ரூப். A மற்றும் B ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது AB க்ரூப். இரண்டையும் வெளிப்படுத்தால் H என்ற ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது O க்ரூப். அதையும் வெளிப்படுத்தாதபோது அது பாம்பே க்ரூப்.
O வகை ரத்தமும் பாம்பே வகை ரத்தமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் O வகை ரத்தத்தை பாம்பே க்ரூப் உள்ளவரது உடல் ஏற்காது. அவர்களுக்கு பாம்பே ரத்த வகை உள்ளவர்கள்தான் ரத்தம் கொடுக்க முடியும்.
O பிரிவு உள்ளவர்கள் எல்லோருக்கும் ரத்தம் கொடுக்கலாம், AB பிரிவு உள்ளவர்களுக்கு மற்ற எந்த வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லப்பட்டாலும் அதெல்லாம் இப்போது நடைமுறையில் இல்லை.
ரத்தம் ஏற்றும் முன், தானமளித்தவரின் ரத்தப் பிரிவையும் தானம் பெறுபவரின் ரத்தப் பிரிவையும் பார்த்து, பொருந்திப் போனால்தான் ரத்தம் ஏற்றுவார்கள்.எமர்ஜென்சி நேரத்தில் கவனக்குறைவாக மாற்றிக்கொடுப்பது வேண்டுமானால் நடக்கலாம். மற்றபடி அந்தந்த ரத்தவகையைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ரத்தவகை உள்ளவர்கள் தானம் கொடுப்பதுதான் சரியானது. அதை 'மேஜர் டிரான்ஸ்ஃபியூஷன் ரியாக்ஷன்' (major transfusion reaction) என்று சொல்வோம். அது சீரியஸான விஷயம். சிறுநீரகச் செயலிழப்பு, மூச்சு அடைப்பது, ரத்த அழுத்தம் குறைவது, சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் வெளியேறுவது, குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் போன்றவை வரலாம்.
ரத்தம் ஏற்றும் முன், தானமளித்தவரின் ரத்தப் பிரிவையும் தானம் பெறுபவரின் ரத்தப் பிரிவையும் பார்த்து, பொருந்திப் போனால்தான் ரத்தம் ஏற்றுவார்கள். எனவே, இன்று இதுபோன்ற தவறுகள் நிகழும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவே, அது குறித்த பயம் தேவையற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.