#BIG NEWS : மன்மோகன் சிங் காலமானார்..!
Newstm Tamil December 27, 2024 08:48 AM

மன்மோகன் சிங் பஞ்சாபின் கா என்ற இடத்தில்( தற்போது பாகிஸ்தானில் உள்ள) 1932 செப்., 26 ல் பிறந்தவர் மன்மோகன் சிங். நாடு சுதந்திரம் பெற்றதும், மன்மோகன் குடும்பத்துடன் இந்தியாவில் குடிபெயர்ந்தார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலையில் , டில்லி பல்கலையிலும் பணியாற்றி உள்ளார். டில்லி ஜேஎன்யூ.,விலும் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.
 

இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத்தலைவராக இருந்தார். 1990 -91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார்.
 

1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். இக்காலத்தில் தான் புதிய பொருளாதார கொள்கை முதலில் அமல்படுத்தப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

பிறகு 2004 முதல் 2014 வரை பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார். இதன் மூலம், நேரு, இந்திரா, மோடிக்கு பிறகு நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.
 

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அது முதல் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
 

92 வயதான இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
 

இந்நிலையில், அவரது உடல்நிலை இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மருத்துமவனைக்கு விரைந்தனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவும் மருத்துவமனைக்கு விரைந்தார்.
 

ஆனால், இரவு 10:30 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவு மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.