நாளை (28/12/24) நடைபெறும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ள, தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சதீஷ், மற்றும் விஜய பிரபாகர் அழைப்பு விடுத்தனர். விஜயகாந்த் நினைவு தின பேரணியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலை ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.