மன்மோகன் சிங்... இவர் அரசியல்வாதி அல்ல. ஆனால், இரண்டு முறைப் பிரதமராக இந்தியாவை வழி நடத்தியிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் நின்று அவர் பதவிகளைத் தேடிப் போனதில்லை. ஆனால், நிதியமைச்சர், பிரதமர் எனப் பெரும் பதவிகள் அவரைத் தேடி வந்தன. 60 வயதுவரை அரசியல்மீது துளிகூட ஆர்வமில்லாத மன்மோகன், 1990-களுக்குப் பிறகு, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்தார். நவீன இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பியான மன்மோகன் சிங், தனது 92-வது வயதில் இந்த மண்ணைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார்!
ரிசர்வ் வங்கி கவர்னர் டு நிதியமைச்சர்!
ஒருங்கிணைந்த இந்தியாவில், பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள, Gah என்ற சிறு கிராமத்தில், செப்டம்பர் 26, 1932-ல் பிறந்தார் மன்மோகன் சிங். லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை முடித்த மன்மோகன், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றினார். 1972-ல் நிதியமைச்சகத்தில் சிறப்புப் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர், 1976-ல் நிதித்துறைச் செயலராகப் பதவியேற்றார். 1982-ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்று, சிறப்பாகச் செயலாற்றினார். 1987 முதல் 1990 வரை சுவிட்சர்லாந்திலுள்ள பொருளாதாரக் கொள்ளை குழுவின் பொதுச் செயலாளராகப் பணிசெய்தார்.
மன்மோகன் சிங்1991-ல், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியது இந்தியா. அந்தச் சமயத்தில், இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார் பி.வி.நரசிம்ம ராவ். எப்படியாவது பொருளாதார நெருக்கடிகளைச் சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசு.
நரசிம்ம ராவ் பதவியேற்பதற்கு சில தினங்களே இருந்த நிலையில், அப்போதைய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா, எட்டு பக்க அறிக்கை ஒன்றை நரசிம்ம ராவிடம் சமர்ப்பித்தார். இந்தியாவின் பொருளாதார நெருக்கடி பற்றிய அறிக்கைதான் அது. தனது நெருங்கிய ஆலோசகரான அலெக்ஸாண்டரிடம் நரசிம்ம ராவ் ஆலோசனை கேட்க, `முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஐ.ஜி.படேலை நிதியமைச்சராக்கலாம்' என்கிற யோசனையை வழங்கினார் அலெக்ஸாண்டர். ஐ.ஜி.படேல் மறுக்கவே, மன்மோகன் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அப்படித்தான் நிதியமைச்சர் ஆனார் மன்மோகன்.
இந்தியாவின் சிறந்த பட்ஜெட்!
1991-ல், மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்தான், `நவீன இந்தியாவின் மிகச் சிறந்த பட்ஜெட்' என இன்றளவும் புகழப்பட்டுவருகிறது. பிரஞ்சு எழுத்தாளர் விகடர் ஹ்யூகோவின், `ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டதென்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது' என்கிற தத்துவத்தைச் சொல்லி அதுவரையிருந்த எந்த நிதியமைச்சரும் செய்யாத பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேற்கொண்டார் மன்மோகன் சிங். துவண்டு கிடந்த இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மன்மோகனின் பொருளாதார தாராளமயக் கொள்கையால் வறுமையிலிருந்த பல இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ஆரம்பித்தது. இந்தியாவின் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறைகள் வளர்ச்சி கண்டன.
Manmohan singh | மன்மோகன் சிங்நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கிடம் `உங்களை என் அமைச்சராக்க விரும்புகிறேன்' என்று சொன்னபோது, ``நாம் வெற்றிகரமாக இருந்தால், நம் இருவருக்கும் அதற்கான நற்பெயர் கிடைக்கும். ஆனால் நாம் தோல்வியடைந்தால், நீங்கள் பதவி விலக வேண்டியிருக்கும்'' என்றிருக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படவில்லை. மாறாக, அனைவரது பாராட்டையும் பெற்ற நிதியமைச்சராக மாறினார். 1998-ல், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியமைத்தது. அந்தச் சமயத்தில், ராஜ்ய சாபாவில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றினார் மன்மோகன்.
பாகிஸ்தானில் பிறந்த இந்தியப் பிரதமர்!
தொடர்ந்து 2004 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில், மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் சோனியா காந்தி. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது மன்மோகன் சிங் அரசு. தொடர்ச்சியாக 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸே வெற்றிபெற, மீண்டும் பிரதமரானார் மன்மோகன். 2010-11 காலகட்டத்தில், இந்தியாவின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) முதன்முறையாக டபுள் டிஜிட்டை எட்டியது. 10.3 சதவிகித ஜி.டி.பி வளர்ச்சியைத் தொட்டது இந்தியா.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும் அறிந்து ஆட்சி செய்த பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங். மணிக்கணக்கில் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு, தனக்கெதிரான விமர்சனங்களுக்குக்கூடத் தைரியமாகப் பதில் சொன்ன பிரதமராக இன்று வரை நினைவுகூரப்படுகிறார்.
மன்மோகன் சிங் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறங்கிய பின்னர், தொடர்ந்து பா.ஜ.க அரசுக்கு பல்வேறு பொருளாதார அறிவுரைகளை வழங்கினார். மன்மோகன், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்யவில்லை. நாட்டின் முக்கிய விஷயங்கள், பொருளாதார பிரச்னைகளில் மட்டுமே தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சமாளிக்க பா.ஜ.க அரசுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்த மன்மோகன், இதனால் ஜி.டி.பி சரியும் எனக் கணித்தார். அவர் கணித்த படியே ஜி.டி.பி சரிந்தது. ராஜ்ய சபா எம்.பி ஆக இருந்த மன்மோகன் சிங், 90 வயதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த போதும், டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசரச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வீல் சேரில் வந்திருந்தார் மன்மோகன். இந்தக் கடமை உணர்வை, எதிர் வரிசையிலிருந்த பிரதமர் மோடியே வெகுவாகப் பாராட்டினார்.
அனைத்துக் கட்சியினரும் மதிக்கக்கூடிய வெகு சில அரசியல் தலைவர்களுள் மன்மோகன் சிங்க்கு மிக முக்கிய இடமுண்டு. இந்தியா மக்களால் வெறுக்கப்படாத அரசியல் தலைவர்களின் பட்டியலிலும் நிச்சியம் மன்மோகன் சிங்கின் பெயர் இடம்பெற்றிருக்கும்.
ஒரு முறை, ``ஊடகங்களைக் காட்டிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை காட்டிலும் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும்'' என்றிருந்தார் மன்மோகன் சிங். நிச்சயம் இந்திய அரசியல் வரலாறு மன்மோகன் சிங்கிடம் மிகக் கனிவாகவே இருக்கும். போய் வாருங்கள் மன்மோகன் சிங் அவர்களே!