Doctor Vikatan: High BP-ஐ குறைக்க சித்த மருத்துவம் உதவுமா?
Vikatan December 27, 2024 04:48 PM

Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா.... எப்படிப் பட்ட உணவுகள், மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

உயர் ரத்த அழுத்தம் என நீங்கள் குறிப்பிடுவது எந்த அளவு என்பதில் முதலில் உங்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தின் சாதாரண அளவு என்பது 120/80. இது 140-ஐத் தாண்டும்போது அது உயர் ரத்த அழுத்தமாகக் கருதப்படும்.

சித்த மருத்துவத்தில் வாத தேகி, பித்த தேகி, கப தேகி என்பதைப் பார்ப்பார்கள்.  அதன் அடிப்படையில்தான் உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.  குருதி அழல் சூரணம், சர்ப்பகந்தா சூரணம், வெண்தாமரை சூரணம், மருதம்பட்டை சூரணம் என உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகள் உள்ளன.  வாத, பித்த, கப தேகியைப் பார்த்தபிறகு, இவற்றில் யாருக்கு, எந்த மருந்து சரியாக இருக்கும் என சித்த மருத்துவர் முடிவு செய்வார். 

 மருந்துகள் மட்டுமன்றி,  சில யோக முறைகளையும் தியான முறைகளையும், உணவு முறைகளையும் சித்த மருத்துவத்தில் பரிந்துரைப்போம்.  உயர் ரத்த அழுத்தம் என்பது பித்த ஆதிக்க நோயில் வரக்கூடியது. அதாவது  பித்தத்தை அதிகரிக்கும் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றை இவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும்.  இரவில் 6 முதல் 7 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும். தூக்கமின்மையால் பித்தம் அதிகரிக்கும். பித்தம் அதிகரித்தால் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். 

உணர்வுகளைக் கட்டுப்படுத்த எளிமையான தியான முறைகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

கோபம், துக்கம், ஸ்ட்ரெஸ் என உணர்வுரீதியான பாதிப்புகளும் இருக்கக்கூடாது. இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த எளிமையான தியான முறைகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.  பித்தம் அதிகமுள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்ற செயல்பாட்டிலும் பிரச்னை இருக்கலாம்.  அதனால் வயிறு தொடர்பான செரிமான பிரச்னைகள் இருக்கலாம். வயிற்றுப் பிரச்னைகளை ரத்த அழுத்தத்தோடு பெரும்பாலும் தொடர்புபடுத்திப் பார்க்க மாட்டார்கள்.  எனவே,  உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

எளிதில் செரிக்கக்கூடிய, எண்ணெய், கொலஸ்ட்ரால் இல்லாத உணவுகளைச் சாப்பிட வேண்டும். லவங்கம், ஏலக்காய், ஓமம், சீரகம் போன்றவற்றைச் சேர்த்த நீர் எடுத்துக்கொள்ளலாம்.  நடைப் பயிற்சியும் அவசியம். எலுமிச்சை, ஏலக்காய் சேர்த்த பானகம், வில்வ இலை சேர்த்த நீர் போன்றவை எல்லாம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.  இவையெல்லாம் பொதுவான பரிந்துரைகள். எனவே, உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக உணர்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு, உணவுப்பழக்கத்திலும் கவனம் செலுத்தும்போது முழுமையான பலன்களை அடையலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.