மன்மோகன் சிங் மறைவு எதிரொலி: இன்று அதிமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து..!
WEBDUNIA TAMIL December 27, 2024 04:48 PM


அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால், தமிழகம் முழுவதும் இன்று நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், ஆர்ப்பாட்டத்திற்கான மாற்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Edited by Siva
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.