இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியதாவது, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.
இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பின்பற்றுபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.