தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் நடைபெற்ற ஐயப்ப சாமி மண்டல பூஜை விழாவில் மைக்கை பிடித்து பாடல் பாடும் போது ஷாக்கடித்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வாய்க்காங்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீருணாகர விநாயகர் கோவிலில் வைத்து ஐயப்பசுவாமியின் 19-வது மண்டல பூஜை திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற ஆழ்வார்திருநகரி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வெங்கடேசன் (27) பங்கேற்றுள்ளார். ஆறுமுகநேரி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெங்கடேசன் ஐயப்ப சுவாமி மண்டல பூஜையில் பங்கேற்கும் போது மைக் பிடித்து பாட்டு பாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப சுவாமி மண்டல பூஜை பிடித்து பாட்டு பாடும்போது மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் இறந்தது அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.