3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!
Webdunia Tamil December 27, 2024 09:48 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட மாவட்டங்களில் தொடர் மழைப்பொழிவு இருந்து வந்த நிலையில் தற்போது அது வலுவிழந்துள்ளதால் மழை சற்று குறைந்து ஆங்காங்கே வெயில் வீசி வருகிறது.

எனினும் காற்றில் தொடர்ந்து நிலவும் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வெயில் மற்றும் மேகமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாகவும், இரவு நேரங்களில் ஆங்காங்கே தூவானம் அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், வரும் நாட்களில் அது மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இலங்கை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.