வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்.. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு.. போலீசார் தீவிர விசாரணை!
Dinamaalai December 30, 2024 04:48 AM

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் உள்ள சாய் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலைக்கு யாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் இரவு கோவில் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

மற்றவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 12 வயது சிறுவன் குணமடைந்து தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.