147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் இதுவரை செய்யாத சாதனையாக ஐசிசி தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 907 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வரலாறு படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சச்சின், தோனி, விராட், கங்குலி, சேவக் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செய்து வந்த நிலையில் முதல்முறையாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் சறுக்கினாலும் 4 போட்டிகளில் விளையாடி பும்ரா 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது மொத்த போட்டிகளிலும் ரோஹித் சர்மா எடுத்த ரன்களை விட ஒரு விக்கெட் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார்.
2016ல் ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் இந்த சாதனையை பும்ரா சமன் செய்தார்.
இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியதைத் தொடர்ந்து ஐசிசி தரவரிசை பட்டியலில் 907 ரேட்டிங் புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.
இதன் மூலமாக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 907 புள்ளிகளை பெற்ற முதல் இந்திய பந்துவீச்சாளர் என்கிற புதிய வரலாற்றை பும்ரா படைத்துள்ளார்.