Yashasvi Jaiswal: ``ஜெய்ஸ்வால் ஏமாற்றப்பட்டாரா?"- விவாதத்தைக் கிளப்பிய மூன்றாவது நடுவரின் முடிவு
Vikatan December 30, 2024 10:48 PM
பார்டர் கவாஸ்கர் தொடரின் மெல்பர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்திய அணியைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். அவருக்கு மூன்றாவது நடுவர் தவறாக அவுட் வழங்கிவிட்டாரென சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.
Jaiswal

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய 71 வது ஓவரின் 5 வது பந்தில் அவுட் ஆகியிருந்தார். பந்து எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனதற்காக ஆஸ்திரேலிய அணி களநடுவரிடம் அப்பீல் செய்தது. நடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே ரிவியூவ் செய்தனர். மூன்றாவது நடுவர் ஸ்நிக்கோ மீட்டரைப் பயன்படுத்தி பந்து பேட்டில் உரசியிருக்கிறதா இல்லையா என்பதை ஆய்ந்தார். ஸ்நிக்கோ மீட்டரில் பந்து உரசியதற்கான எந்த அதிர்வும் இல்லை. ஆனாலும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். பந்து தன் பாதையிலிருந்து விலகிச் செல்வது கண்கூடாக தெரிவதால் அவுட் கொடுக்கிறேன் என அவர் அவுட் கொடுத்தார். இந்த முடிவில் ஜெய்ஸ்வால் கடும் அதிருப்தியானார்.

களத்திற்கு வெளியேயுமே இந்த முடிவு சர்ச்சையானது. ஜெய்ஸ்வால் அவுட்தான், நாட் அவுட்தான் என இருவிதமாக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 'நீங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், அதை மட்டுமே பயன்படுத்தி முடிவைச் சொல்லுங்கள். நீங்கள் வெறுங்கண்ணில் பார்த்தது 'Optical Illusion - ஒளி மாயை' ஆகக் கூட இருக்கலாம்.' என கவாஸ்கர் பேசியிருக்கிறார். 'பந்து தனது பாதையை விலகிச்செல்வது தெளிவாகத் தெரிகிறது. Ball Tracking-ம் அதைத்தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை அது அவுட்தான்.' என ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

Jaiswal

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுமே அது அவுட்தான், நாங்கள் அதில் பெரிதாகக் குழப்பமடையவில்லை என்றே பேசியிருக்கிறார்.

ஜெய்ஸ்வாலின் அவுட் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.