TVK Vijay: `சட்டம் ஒழுங்கு டு ஒன்றிய அரசின் நிதி' ஆளுநரை சந்தித்த விஜய் - மனுவில் உள்ளது என்ன?
Vikatan December 30, 2024 10:48 PM

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், அண்ணா பல்கலைகழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. முதலில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், பின்னர் பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்தார் விஜய். சமீபமாக தொடரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, அத்துமீறல் என தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாகியிருக்கிறது என எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

விஜய்

இந்த சந்திப்பு குறித்து வெளியான தகவலில், அண்ணா பல்கலைக் கழக விவகாரம் தொடர்பாக முதல்முறையாக ஆளுநரை சந்தித்திருக்கும் த.வெ.க தலைவர் விஜய், மூன்று பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை ஆளுநர் ரவியிடம் வழங்கியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரனின் பின்னணி குறித்தும், விசாரணை முறையாக நடத்தவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. வெளியே வந்த விஜய், செய்தியாளர்களை சந்திக்கவில்லை. எனினும் கட்சி பொதுச் செயலாளர் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், ``இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் கோரிக்கையைக் கேட்ட ஆளுநர் அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.