தொடரும் என்கவுண்டர் - சத்தீஸ்கரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை.!
Seithipunal Tamil January 04, 2025 05:48 AM

இந்தியாவிலேயே அதிகளவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுண்டர்களும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையினர், அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

இதில் நக்சலைட்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.