இந்த வழக்கை திசை திருப்ப பாக்குறீங்களா…? காவல்துறை மீது அண்ணாமலை பகீர் குற்றசாட்டு..!!
SeithiSolai Tamil January 05, 2025 05:48 AM

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.