வங்கதேச நீதிபதிகள் 50 பேருக்கு இந்தியாவின் தேசிய நீதித்துறை அகாடமியில் பயிற்சி..!
Seithipunal Tamil January 05, 2025 07:48 AM

வங்கதேச நீதித்துறையைச் சேர்ந்த 50 நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியின் கீழ் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் படி, சட்டத்துறை அமைச்சகம், இந்த பயிற்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

பிப்ரவரி 10 முதல் 20 வரை வங்கதேச நீதித்துறையைச் சேர்ந்த 50 நீதிபதி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

பயிற்சித் திட்டங்களுக்கான அனைத்து செலவுகளையும் இந்திய அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் சட்டம் மற்றும் நீதிப் பிரிவின் துணைச் செயலாளர் டாக்டர் அபுல் ஹஸ்னாட் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த பயிற்சியில்,மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அல்லது அதற்கு இணையான அதிகாரிகள், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, கூட்டு மாவட்ட நீதிபதி, மூத்த உதவி நீதிபதி மற்றும் உதவி நீதிபதி ஆகியோர் அடங்குவர்.

மேலும்,வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான அந்த நாட்டின் உறவு சீர்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடைக்கால அரசில் பொறுப்பில் இருக்கும் பலர், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்நாட்டில், சிறுபான்மை ஹிந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.