நாகப்பட்டினம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH83) ஒரு பகுதியான நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்து, அதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் அதன் பிறகு மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற நிலையில், பணிகளில் தொய்வு ஏற்பட்டு நெடுஞ்சாலை பணி நிறுத்தப்பட்டது. பிறகு மத்திய பா.ஜ.க அரசு நான்குவழிச் சாலைக்குப் பதிலாக இருவழிச் சாலையாக அமைக்கப்படும் என அறிவித்து, அதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, வேலையை மீண்டும் தொடங்கினர்.
பின்னர் பல கட்டங்களாக நடைபெற்ற நெடுஞ்சாலை பணிகள் பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் மாறி மாறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தஞ்சாவூர் - நாகப்பட்டினம் இருவழிச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்து, அர்ப்பணித்தார்.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மக்களின் 20 ஆண்டுக்கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்ததாக, அப்போது பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த இருவழிச் சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி திறக்கப்பட்ட இந்தச் சாலை, எட்டு மாதங்கள் எட்டிய நிலையில், பல இடங்களில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்ட எல்லையான கானூர் முதல் கோயில்வெண்ணி வரை உள்ள 40 கிலோ மீட்டர் தூரத்தில் 130-க்கும் மேற்பட்ட பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் நடைபெற்றுள்ளன.
மேலும் பல இடங்களில் சாலைகள் உள்வாங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணித்து வருகின்றனர். மேலும் திருவாரூர் நகருக்குள் வாகனங்கள் வராமல் செல்ல திட்டமிடப்பட்ட அரை வட்டச் சாலை பணிகள் தற்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதே போல ஆங்காங்கே கழிவறை கட்டும் பணிகளும் நிறைவு பெறாமல் உள்ளன.
மேலும் சாலை ஓரங்களில் தடுப்புகள் முறையாக அமைக்கப்படாமலும், சாலை நடுவே உள்ள தடுப்புகளில் உள்ள மண் சரிவர நிரப்பப்படாமலும் உள்ளது. சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணிகள் முறையாக அமைக்கப்படாமல் தண்ணீர் வெளியேற வழியின்றி உள்ளது. பல இடங்களிலும் முறையாக ஒளி எதிரொலிப்பான்கள் அமைக்கப்படாததால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதனால் இந்தச் சாலைகளில் பயணிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ``மைசூர் - நாகப்பட்டினம் சாலை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. தஞ்சாவூர் வரை நான்குவழிச் சாலையும் தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் வரை சுமார் 82 கிலோமீட்டர் சாலை இருவழிச் சாலையாக ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், திருவாரூர் நகரத்தின் முன்னால், அம்மையப்பன் வரை சாலை பணி முடிவுற்றது. மீதமுள்ள அம்மையப்பனிலிருந்து நீலப்பாடி வரை 15 கிலோ மீட்டரும் சிக்கல் முதல் நாகப்பட்டினம் வரை 7 கிலோ மீட்டரும் சாலை பணி முடிவடையாமல் உள்ளது.
சாலை பணி முடிவடையாமலேயே கோயில்வெண்ணி பகுதியில் சுங்கச்சாவடி அமைத்துள்ளது சட்ட விரோதமானது. கும்பகோணம் நார்த்தாங்குடி பகுதியில் மாநில நெடுஞ்சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை கடக்கிறது. இவ்விடம் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்த இடமாகும். ஆகையால் அவ்விடத்தில் மேம்பாலம் மற்றும் சாலை தடுப்புகள் அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கோயில்வெண்ணி நீடாமங்கலம் சாலையில் சுமார் 12-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றிருக்கிறது. சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு புதிய மரங்கள் நடப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
கோயில்வெண்ணி பகுதி, மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பகுதியாகும். அப்பகுதியில் டோல்கேட் அமைத்துள்ளது விவசாயிகளுக்கு தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. சாலை பணி மேற்கொள்ள தரமான மண்ணை பயன்படுத்தாமல் அருகில் இருந்த வாய்க்கால்களிலும் வயல்வெளிகளிலும் இருந்த களிமண்ணை பயன்படுத்தி உள்ளதால் பல இடங்களில் பள்ளம் விழுந்துள்ளது. பக்கவாட்டில் எந்த பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளாமல் இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், நெடுஞ்சாலை பணியை துரிதப்படுத்தவும், கோயில்வெண்ணி டோல்கேட்டை அப்புறப்படுத்தவும் எங்கள் அமைப்பின் சார்பிலும், அனைத்துக் கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் முதற்கட்ட போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதே நிலை நீடித்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்" என்று கூறினார்.
பி.ஆர்.பாண்டியன்இது குறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் செல்வகுமாரிடம் பேசினோம். ``இந்த தேசிய நெடுஞ்சாலை ஓரம் 29,000 மரக்கன்றுகள் நட ஒப்புதல் பெறப்பட்டு, முதற்கட்டமாக 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மண்ணின் தரம் குறித்து தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்களிடமிருந்து எந்த ஒரு குறையும் எங்களிடத்தில் செல்லவில்லை. அதிக விபத்துகள் ஏற்படும் இடத்தில் வேகத்தடை, சாலை தடுப்பு மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் போன்றவை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த இடங்களில் மேம்பாலம் கட்டும் பணியைத் துரிதப்படுத்தி உள்ளோம்" என்று கூறினார்.
இந்த தேசிய நெடுஞ்சாலை பணியைத் துரிதப்படுத்தி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.