பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 சன்மானம்!
Dinamaalai January 07, 2025 11:48 AM

பிச்சைக்காரர்கள் குறித்து தகவலளித்தால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் பலரும் இது குறித்து தகவல் அளித்து கலெக்டர் அலுவலகத்தில் சன்மானத்தை பெற்று செல்கின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பலரும் யாசகம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தகவல் கொடுக்க செல்போன் எண்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு இந்தூர் மாவட்ட பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து, அம்மாவட்ட ஆட்சியர் அஷிஷ் ”இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிர்வாக எண்களுக்கு அழைத்து தகவல் கொடுத்ததாகவும் அதனை விசாரித்ததில் 12 பேர் கொடுத்த தகவல் உண்மை” என உறுதி செய்யப்பட்டதாகவும்  கூறியுள்ளார்.  

இந்நிலையில், அந்த 12 பேரில் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜனவரி 6ம் தேதி ரூ.1,000 பரிசு தொகை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தூரில் கொண்டுவரப்பட்ட இந்த தடையினால் பிச்சை எடுப்பவரோ அல்லது கொடுப்பவரோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவி 233 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இந்த குற்றத்தினால் அவர்களுக்கு ஒரு  ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக, கடந்த 4 மாதங்களில் அம்மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனைகளில் 400 பிச்சைக்காரர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள்  மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பிச்சை எடுத்த 64 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இந்தூர் உட்பட 10 இந்திய நகரங்களை பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.