திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்... 126 போ் உயிரிழப்பு!
Dinamaalai January 08, 2025 02:48 PM

நேற்று ஜனவரி 7ம் தேதி காலை 9.05 மணிக்கு சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் புனித நகரமான ஷிகாட்ஸேவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 126 போ் உயிரிழந்தனா். இதில் 188 போ் காயமடைந்தனா்.

ரிக்டா் அளவுகோளில் 6.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சமடைந்தனா். இடிபாடுகளில் சிக்கியவா்களில் 126 போ் உயிரிழந்ததாக சீனாவின் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சீன அதிபா் ஷி ஜிங்பின் உத்தரவிட்டுள்ளாா். பேரிடா் மீட்புப் படையினா் 22,000 பேரும், 1,500 தீயணைப்புப் படை வீரா்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வடகிழக்கு நேபாளத்தின் இமயமலைத் தொடரான கூம்பு பகுதியின் 90 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி அமைந்திருந்ததாக சீன அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.

இந்திய எல்லைக்கு அருகே அமைந்துள்ள திபெத்தின் ஷிகாட்ஸேவில் உள்ள திங்ரி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமாா் 60,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும், திங்ரி மாவட்டத்தின் உள்ள 27 கிராமங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்தன.

திபெத்திய மத குரு தலாய் லாமாவுக்கு அடுத்த தலைவராக அறியப்படும் பஞ்சென் லாமாவின் புனிதப் பகுதியாக ஷிகாட்ஸே கருதப்படுகிறது. திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களுக்கு தலாய் லாமா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2015-இல் ஷிகாட்ஸேவில் 8.1 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 18 போ் உயிரிழந்தனா். நேபாளத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நேபாளத்தில் அதிா்வுகள்: தற்போது திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு நேபாளத்தின் கவ்ரிபலன்செளக், சிந்துபலன்செளக், சொலுகும்பு மாவட்டங்களிலும் உணரப்பட்டது.

காத்மாண்டில் கட்டடங்கள், மின் கம்பங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளைவிட்டு வெளியேறியதாகவும், இதில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் நேபாள காவல் துறை தெரிவித்தது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.