துணைவேந்தர் நியமனம் - தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்.!
Seithipunal Tamil January 09, 2025 09:48 AM

பல்கலைக்கழக மானிய குழுவின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்து இருப்பதாவது:-

"பல்கலைக்கழக மானியக்குழு 07.01.2025 அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான அதிகாரங்கள் முழுவதும் ஆளுநரிடம் இருப்பதாக வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை முற்றிலும் மீறும் ஒன்றாகும். 

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மட்டுமே அரசு எந்தவித முடிவையும் எடுக்க வேண்டும். மாநில பல்கலைக்கழகங்களுக்கு அந்த மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பது அத்தியாவசியம். ஆனால், அவர்களை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாக யு.ஜி.சி. வரைவு அறிக்கை 2025-ல் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

* மாநில உரிமை மீறல்: மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாகத்திற்கான மாநிலத்தின் பங்கை நிராகரிக்கும் வகையில் யு.ஜி.சி.யின் அறிவிப்பு உள்ளது.

* நிர்வாக சிக்கல்: மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லையென்றால், நிர்வாகம் பெரும் குழப்பங்களை சந்திக்கும்.

* சட்ட விரோத நிலை: பல்கலைக்கழக சட்டங்களுக்கு மாறாக இதுபோன்ற அறிவிப்புகளை செயல்படுத்துவது சட்ட விரோதமானது.

யு.சி.ஜி கொண்டு வரும் முறைகளை மாநில அரசுகள் தன் அரசாணைகளின் மூலமே நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியிருக்கும் நிலையில், மாநில பல்கலைக்கழகங்களில் மாநில பிரதிநிதிகளை புறக்கணிப்பது நிர்வாகத்தில் கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தும். இந்தச்செயலானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறிப்பதாகவுள்ளது.

இதுபோன்ற அறிவிப்புகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே, யு.ஜி.சி. வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பிற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு அதனை யு.ஜி.சி. உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.