தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?
Webdunia Tamil January 05, 2025 04:48 PM

தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில், பயணிகள் நலன் கருதி கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - கடற்கரை இடையே இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்த வழித்தடத்தில் 40 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இன்று அதாவது ஜனவரி 5ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால பணிகள் நடைபெறுகிறது இதன் காரணமாக காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையில் இயக்கப்படும். அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி இன்று ஒரு நாள் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகள், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.