போபாலில் உள்ள வங்கியில், வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அதாவது அங்குள்ள பகுதியில் உள்ள தன்லட்சுமி வங்கிக்குள் முகத்தில் முகமுடி மற்றும் ஸ்பிரே பாட்டிலுடன் புகுந்த வாலிபர் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது ஸ்ப்ரே அடித்துள்ளார். இருப்பினும் அவர்கள் யாரும் மயக்கம் அடையவில்லை. இதனால் அவர் மீண்டும் பேங்கில் இருந்து வெளியேறினார். இது குறித்து வங்கியின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.
வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த குற்றவாளி உஜ்ஜைனியைச் சேர்ந்த 24 வயதான சஞ்சய் குமார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் குமார் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஏ எம் எஸ் படித்து முடித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, சஞ்சய் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையானவர் என்றும், அவர் தனது நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி அந்த பணத்தை சூதாடுவதற்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த சூதாட்டத்தில் அவர் 2000 ரூபாய்க்கு மேல் இழந்துள்ளார். இதனால் அவர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதோடு, பாதுகாவலர் இல்லாத வங்கியை குறி வைத்து மோசடி செய்ய சோதனை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரது அறையில் இருந்து ஏர் பிஸ்டலையும், ஸ்ப்ரே பாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.