TN Assembly : ``ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது!" - முதல்வர் ஸ்டாலின் | Live
Vikatan January 06, 2025 08:48 PM
``ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது!" - முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்

ஆளுனர் ஆர்.என். ரவி இன்று தொடங்கிய, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாதியிலேயே அவையிலிருந்து வெளியிறிவிட்டார். ஆளுநரின் இந்த செயல் குறித்து முதல்வர் ஸ்டாலின், ``அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!" என்று பதிவிட்டிருக்கிறார்.

ஆளுநர் வெளியேற்றப்பட்டது குறித்து சபா நாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளுடன் அவைக்குள் வந்தார்கள். நானோ, முதல்வரோ பேச முயற்சிக்கும் போது அமைதியாகதான் இருந்தார்கள். பல்கலைக் கழகத்தின் வேந்தரான, தற்போதைய ஆளுநர் பேசத் தொடங்கும்போதுதான் அவர்கள் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஏதோ கலவர நோக்கத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டோம். சட்டப்பிரிவு 171-ன் படி ஆளுநர் கண்டிப்பாக சட்டமன்ற உரையை நிகழ்த்த வேண்டும். ஜனநாயக கடமையை மூன்றாவது முறையாக மீறியிருக்கிறார்.

சபாநாயகர் அப்பாவு

மதராஸ் பிரிடென்ஸியின் மரபின்படிதான் சட்டப் பேரவை நடந்து வருகிறது. எந்த ஆளுநரும் இதை மீறவில்லை. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்தான் அவையில் கருத்து சொல்ல உரிமை உண்டு. சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அழைப்பு கொடுக்க சென்றபோதுகூட நன்கு உபரித்து, மகிழ்ச்சியாக உரையாற்றினோம். தெலங்கானாவில் தமிழிசை அவர்களை சட்டமன்றக் கூட்டத்தொடருக்கே அழைக்கவில்லை. அப்படியும் சட்டமன்றம் நடக்கதானே செய்தது. இந்தியாவின் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலத்திலாவது இதுபோன்ற சிக்கல் இருக்கிறதா?" என்றார்.

திராவிட மாடல் ஆட்சியில் கருத்து சுதந்திரத்துக்கு அனுமதி இல்லை! வானதி சீனிவாசன்

சட்டமன்றத்தில் நடந்தது குறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``சபாநாயகர் ஆளுநர் உரையின் மொழிப்பெயற்பை வாசிக்கும் போது, அண்ணா பல்கலைக் கழக விவகாரம் குறித்து பதிலளிக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் எழுந்து கோரிக்கைவிடுத்தோம். அதன்பிறகே வெளிநடப்பு செய்தோம். ஆனால் சட்டமன்றத் தலைவர் 'என் அனுமதி இல்லாமல் இந்த செய்தி வெளியே வரக்கூடாது' என்கிறார். ஒரு எமர்ஜென்சியைப் போல நடக்கிறது சட்டப் பேரவை. கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு என்ன அர்த்தம். திராவிட மாடல் ஆட்சியில் கருத்து சுதந்திரத்துக்கு அனுமதி இல்லை. அமைச்சர்களிடம் கேட்டக்கப்படும் கேள்விகளுக்கு சபாநாயகர் பதிலளித்திருக்கிறார். தேசிய கீதம் விவகாரத்தில் எத்தனையோ மரபுகளை தமிழ்நாடு அரசு மீறியிருக்கிறது. வேண்டுமென்றே தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.

ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்ப இதுதான் காரணம்!

சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் தமிழ வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருக்கனும் ஒருவர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், ``2025 ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் இது. பொறுப்பான பதவியில் இருக்கும் அவர், ஒவ்வொரு முறை சட்டமன்றத்துக்கு வரும்போது, புதிய மரபுகளை உருவாக்க முயற்சிக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், முடியும் போது தேசிய கீதமும் பாடப்படும். அதுதான் ஆளுநர் உரைக்கும். ஆனால் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசியக் கீதமும் பாடப்படவேண்டும் எனக் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வன்மையான கண்டனத்துக்குறியது.

வேல்முருகன்

ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் இந்தப் புதிய நடைமுறையை புகுத்துவதற்கு முயற்சிக்கிறார். இது தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல். இதை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் ஆளும் தி.மு.க அரசு பதிலளிக்க வேண்டும் என எப்படி உரிமையுடன் கேட்கிறோமோ அதுபோல, பல்கலைக் கழக வேந்தராக இருக்கும், தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டிய துணை வேந்தர் பதவிகளை தான்தோன்றி தனமாக தானே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஆளுநர், இது குறித்து ஏன் வாய்திறக்கவில்லை... யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆளுநருக்கும் இருக்கிறது. அதன் காரணமாகதான் ஆளுநர் அவையில் நுழைந்ததும் ஆளுநர் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் எழுப்பினோம்" என்றார்.

அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

ஆளுநர் வெளியேறிய விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் விளக்கமளித்திருக்கிறார். அதில், ``ஆளுநர் தமிழ்த்தாய் வாழத்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ஏற்கெனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அப்போதே, ``தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் மரபின்படி, ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், முடியும் போது தேசிய கீதமும் பாடப்படும்" என விளக்கமளித்திருந்தோம். ஆனால் மீண்டும் அதேக் காரணத்தை வைத்து இந்த அவையை பிரச்னைக்குறியதாக மாற்றியிருக்கிறார். இதன் மூலம் அவரின் உண்மையான நோக்கம் என்ன என்பது விளங்கிவிட்டது." என்றார்.

இதுதான் காரணம்! - சட்டமன்றத்திலிருந்து வெளியாது குறித்து ஆளுநர் விளக்கம்!

ஆளுநர் ஆர்.என் ரவி சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்." எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிஷ்ஷாவை டேக் செய்திருக்கிறார்.

அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க-வினர் அதிமுக

அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது உள்ளிட்டக் கோரிக்கைகளுடன், சட்டையில் யார் அந்த சார் என்பதைக் குறிக்கும் பேட்ச் அணிந்து, அ.தி.மு.க-வினர் தொடந்து அமலியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிக் காக்கும்படி சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அவைக்காவலர்கள் மூலம் அ.தி.மு.க-வினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்தும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபாடு வருகின்றனர்.

ஆளுநர் இல்லாமல் தொடங்கிய சட்டமன்றம்!

ஆளுநர் புறப்பட்டு ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், ஆளுநர் ஆற்றவேண்டிய உரையின் தமிழாக்கத்தை சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

சபையில் நடந்தது என்ன?

சபை தொடங்கியதுமே வேல்முருகன் ஆளுநருக்கு எதிரான கோஷமிட்டார். தமிழ் தாய் வாழ்த்து முடிந்து ஆளுநர் பேச தொடங்கிய சமயத்தில் அதிமுகவினர் அரசுக்கு எதிராகவும், வேல்முருகன் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆளுநரால் தனது உரையை தொடர முடியவில்லை. அதே நேரத்தில் ஆளுநர் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று சொல்லியும் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தனது உரையை நிகழ்தாமலே ஆளுநர் கிளம்பிவிடார்

வந்த வேகத்தில் திரும்பிய ஆளுநர்!

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும் என்றனர். இதனால் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான செல்பவப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழக ஆளுநர் சட்டப் பேரவைக்கு வந்தபோது, அவருக்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். தொடந்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறையில்லாதவராக, தொடர்ந்து எதிரான நிலையில் இருக்கிறார். மும்மொழி ஆதரவு, தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்." என்றார்.

யார் அந்த சார்? எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படியே அ.தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வருகையில், யார் அந்த சார்? என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையுடன் அவைக்கு வந்துள்ளனர்

இன்று ஆளுநர் உரை..!

2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 45 நிமிடங்கள் வரை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்த்து வாசிப்பார். ஆளுநர் உரை முடிந்த பிறகு, சமீபத்தில் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவிற்கும், மற்ற பிற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

ஆளுநர் ரவி

அதற்கு அடுத்த நாள்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் பேரவையில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த கால ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த சிலப் பகுதிகளை புறக்கணித்து வாசித்திருந்தார். ஒரு சமயத்தில், சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதெல்லாம் அப்போது அரசியல் அரங்கில் விவாதமானது. அதனால் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.