தமிழக சட்டசபை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவைக்கு வந்த கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அவரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட உரையாற்றாமலே கவர்னர் கூட்ட தொடரை விட்டு சென்று விட்டார்.
இந் நிலையில், தமிழக அரசின் செயல் அவசர நிலை காலத்தை நினைவூட்டுவதாக உள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து கவர்னர் மாளிகை தரப்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது;
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டு மொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது.
மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. என்று கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.